Search This Blog

28 November 2018



தகுதியும் வேலை வாய்ப்பும்

     சமீபத்தில் குருமூர்த்தியிடம் செய்தியாளர்கள் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் லட்சக்கணக்கானோர் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்பது பற்றி கேட்ட போது, “இப்பவும் தகுதியானவர்களுக்கான வேலை இருக்கு. தகுதியானவர்கள் தான் இல்லை….. சும்மா பி.எஸ்.சி., பி.ஏ. ஹிஸ்ட்ரி மட்டும் படிச்சுட்டு வேலை கிடைக்கனும்னா கிடைக்காது…. தகுதியை வளர்த்துக்கனும்” என்று பாடம் எடுத்தார்.
     அதிக தகுதியும் திறமையும் இருப்பவர்கள் எப்படியும் வேலைக்கு போயிடுவாங்க… அதுக்கு குருமூர்த்தியின் அரசாங்கம் ஒன்னுமே செய்ய வேண்டியதில்லை. பி.எஸ்.சி படிச்சவன் கலெக்டர் உத்தியோகம் கேட்கவில்லை. அதுக்கு திறமையுள்ளவன் அதுக்கு போகட்டும்….. எல்லோருமே பெரும் புத்திசாலி இல்லன்னாலும் எதுக்காவது உபயோகப்படற ,மாதிரி கொஞ்சம் புத்தியோடத்தான் இருப்பாங்க…… அவங்களுக்கு தகுந்த வேலை வாய்ப்புகளை உருவாக்காதது யாருடைய குற்றம்?
     சரி…. உங்க வழிக்கே வருவோம்…. வேலை வாய்ப்பகத்தில் பதிவு செஞ்சு இருக்கறவங்க எல்லோருமே தகுதியோட இருந்துட்டா அவங்களுக்கு எல்லோருக்கும் வேலை கொடுத்துடுவீங்களா? அவர்கள் எல்லோரையும் வேலைக்கு எடுத்துக்கற அளவுக்கு தனியார் கம்பனிகளில் அவ்வளவு வேலை வாய்ப்பு இருக்கா?
     எல்லோருக்கும் வேணாம்….. நீங்க சொல்ற தகுதியையும் திறமையையும் அடையும் திறமை இருந்தும் வாய்ப்பில்லாம அவற்றை பயிற்சி பெற்று அடைய முடியாத இளைஞர்கள் ஒரு 25% பேராவது இருப்பாங்கன்னு நினைக்கிறேன்… அவங்க எல்லாம் தங்கள் திறமையை காமிச்சா கூட அவங்களுக்கு இடம் கொடுக்க வழி இருக்கா? அதில் டாப்ல இருக்கறவங்கதான் தகுதியானவங்க என்பீர்கள்…. இப்படி தகுதி என்பதன் அளவுகோலை உயர்த்திக்கிட்டே போனா அதன் முடிவுதான் என்ன?
     இப்ப தகுதியில்லன்னு நீங்க ஒதுக்கறவங்களுக்கு ஒரு பியூன் வேலையோ கிளார்க் வேலையோ கிடைச்சாதானே அவன் தன் குழந்தைகளுக்காவது நீங்க எதிர்பார்க்கும் தகுதியை கொடுக்க முடியும்? இல்ல ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். ஆகாதவன், டாப் கம்பனிகளில் இடம் பெற முடியாதவனெல்லாம் சர்வைவல் ஆஃப் த ஃபிட்டஸ்ட் இல்லன்னு செத்துப் போக சொல்லிடலாமா?
     அப்புறம் இன்னொன்னு. எல்லோருமே தகுதியில்லாதவங்கன்னு ஒதுக்கிட முடியாது. சில வருடங்களுக்கு முன்பு எங்கள் துறை மூலம் நான் ஒரு சாஃப்ட்வேர் கத்துக்க நெதர்லாண்ட் போக வாய்ப்பு கிடைத்தது. நானும் இன்னொரு பணியாளரும் விண்ணப்பித்தோம். முதலில் இப்போது இருக்கும் பணியிடத்திலிருந்தே நேரடியாக பயிற்சிக்கு செல்லலாம்ன்னு சொன்னார் எங்க அதிகாரி… பயிற்சியின் போது ஸ்டைஃபண்ட் கிடைக்கும்… சிக்கனமா செலவு செஞ்சா மிச்சப்படுத்தலாம்னும் சொன்னார்கள்… ஆனால் சென்னையில் போய் விசாரித்த போது, நேரடியாகவெல்லாம் போக முடியாது…. இங்க மூனு வருசமாவது வேலை செய்யனும்… அப்புறம் நிதி ஒதுக்கினால் தான் போக முடியும்னு சொல்லிட்டாங்க….. எனக்கு அப்ப சம்பளம் 5500 தான்… என் குடும்பத்தை இங்க விட்டுட்டு நான் சென்னையில் இருந்தா குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும்…. சுருக்கமா சென்னையில் பணி செய்ய அந்த சம்பளம் கட்டுபடியாகாது என்பதால் வந்த ஆர்டரை கேன்சல் செஞ்சுட்டேன். (அதிகாரிகள் பேச்சைக் கேட்காமல் கேன்சல் செஞ்சதுக்கே கஷ்டப்பட்டேன். அப்புறம் என்னை இங்கே ஜாயின் பண்ண விடாம ஆறு மாதம் பலி வாங்கியதெல்லாம் பெரிய கதை) சரி… விஷயத்துக்கு வருவோம். என்னுடன் விண்ணப்பித்த கார்டு கொஞ்சம் வசதியானவர். சமாளித்து ட்ரெய்னிங்க் போயிட்டு வந்துட்டார். ஆனால் விண்ணப்பிக்கும் போது என்னை விட கம்ப்யூட்டரிலாகட்டும் மற்ற விஷயங்களிலாகட்டும் தகுதி குறைவானவர்தான்…. ஆனால் அவரும் பயிற்சி முடித்து தனக்கான பணியை செவ்வனே செய்யும் அளவுக்கு தகுதியடைஞ்சார். இப்படி வேலை கிடைத்தவுடன் அதில் தங்களைப் பொருத்திக்கொண்டு தகுதியானவர்களாக ஆனவர்களும் உண்டு. அதுக்கு சொல்ல வந்தேன்.
     இந்த சப்ளை அண்ட் டிமாண்ட் மார்க்கெட்ல சிலர் கம்பனி நடத்தறாங்க…. ஹை எண்ட் தகுதியுள்ளவன், அதற்கான சூழல் அமையப் பெற்றவனுக்கு வேலை கிடைக்குது….. இது அரசாங்கம் எந்த துரும்பையும் கிள்ளிப் போடாமலே நடக்கும்….. விலங்குகள் பறவைகள் மேல் கூட கருணை கொள்ளச் சொல்லும் இந்த உலகத்தில், வேலை வாய்ப்பகத்தில் பதிவு செஞ்ச, நீங்க தகுதி குறைவானவன் என்று சொல்லும் மனிதப் பிறவிகளை கை தூக்கி விட நீங்க என்ன கிழிச்சீங்க என்பதுதான் கேள்வி.
    

14 August 2014

அத்தனை அழகையும் அன்பையும்
அத்தனை துரோகத்தையும் துன்பத்தையும்
தன்னுள் அடக்கி
வெறுமனே வடிந்துகொண்டிருக்கும்
காலத்தின் கைகளில் 
ஒரு வியப்புக் குறி கூட இல்லை
வேறு வழியில்லையென்று
பெருநெருப்பின் நிழலில்
எத்தனை காலம் இளைப்பாறுவது?